IIT மெட்ராஸ் ஆன்லைன் ஏரோனாட்டிக்ஸ் BS

 

IIT மெட்ராஸ் ஆன்லைன் ஏரோனாட்டிக்ஸ் BS

விண்வெளி மற்றும் விமான தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறப்பான வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்தியாவின் முன்னணி தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான IIT மெட்ராஸ், ஏரோனாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் நான்கு ஆண்டு இளநிலை அறிவியல் (BS) ஆன்லைன் பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தப் படிப்பில் சேர JEE தேர்வு அவசியமில்லை என்பது முக்கிய அம்சமாகும்.

இந்தப் பாடத்திட்டம் முழுமையாக ஆன்லைன் வகுப்புகளுடன் நடைபெறும். ஆனால் தேர்வுகள் மற்றும் சில ஆய்வக செய்முறை அமர்வுகள் நேரடியாக நடத்தப்படும். இதன் மூலம் மாணவர்கள் கோட்பாட்டு அறிவுடன் செயல்முறை திறன்களையும் பெறுவார்கள்.

பாடத்திட்டத்தில் ஏரோடைனமிக்ஸ், விமான இயக்கவியல், விண்வெளி கட்டமைப்பு, சுற்றுப்பாதை இயக்கவியல், ராக்கெட் ஊந்துவிசை போன்ற முக்கிய தொழில்நுட்ப பாடங்கள் இடம்பெறுகின்றன. விமானம் மற்றும் விண்கலம் வடிவமைப்பில் ஈடுபட விரும்பும் மாணவர்களுக்கு இது வலுவான அடித்தளமாக இருக்கும்.

தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் இந்தப் படிப்பு மூன்று நிலைகளில் அமைக்கப்பட்டுள்ளது – அடிப்படை, டிப்ளமோ மற்றும் டிகிரி. டிப்ளமோ நிலை வரை பயின்று சான்றிதழுடன் வெளியேறும் வாய்ப்பும் உள்ளது. தொடர்ந்து டிகிரி வரை விரும்புவோர் அடுத்த கட்டத்தைத் தேர்வு செய்து தொடரலாம்.

தகுதி

12ஆம் வகுப்பு இயற்பியல் மற்றும் கணிதம் பாடங்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு இல்லை. இந்தியா அல்லது வெளிநாட்டில் இருந்து படிக்கலாம்.

கட்டண விவரம்

அடிப்படை நிலை – ₹60,000
டிப்ளமோ நிலை – ₹2,04,000
டிகிரி நிலை – ₹3,48,000
மொத்த கட்டணம் – ₹6,12,000

SC/ST, மாற்றுத்திறனாளிகள் மற்றும் குறைந்த வருமானக் குழுவினருக்கு 50% முதல் 75% வரை கட்டண தளர்வு வழங்கப்படுகிறது.

சேர்க்கை நடைமுறை

ஆன்லைன் விண்ணப்பம் செய்த பின் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு வாய்ப்பு உள்ளது. முதல் கட்ட விண்ணப்பம் பிப்ரவரி முதல் மே வரை நடைபெறும்.

விண்ணப்ப இணைப்பு

https://study.iitm.ac.in/ae/

எதிர்கால வாய்ப்புகள்

படிப்பு முடித்தவர்கள் விமானத் துறை, பாதுகாப்புத் துறை, விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் போன்ற துறைகளில் வேலைவாய்ப்பு பெறலாம். GATE தேர்வு எழுதும் வாய்ப்பும் உள்ளது. வெளிநாட்டு மேற்படிப்புகளுக்கும் செல்லலாம்.

புதியது பழையவை

نموذج الاتصال