தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்களுக்கு பிப்ரவரி 13ஆம் தேதி முக்கிய நாளாக அமைகிறது. கள்ளக்குறிச்சி, திருச்சி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் இணைந்து இந்த முகாம்களை நடத்துகின்றன.
தனியார் நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை இந்த முகாம் வழங்குகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மாதந்தோறும் நடைபெறும் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் இந்த வெள்ளிக்கிழமை (பிப்.13) நடைபெறுகிறது.
வங்கி, நிதி, வாகன உற்பத்தி, சில்லரை விற்பனை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன.
பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ITI, டிப்ளமோ, B.E., B.Tech முடித்தவர்கள் முன்பதிவு செய்து பங்கேற்கலாம். இந்த முகாமில் வேலை கிடைத்தாலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள பதிவு ரத்து செய்யப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம்
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பிப்ரவரி 13 அன்று காலை 10.30 மணி முதல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் தொழில்துறை, சேவைத்துறை மற்றும் விற்பனைத் துறைகளில் பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன. கூடுதலாக திறன் பயிற்சி நிறுவனங்களும் கலந்து கொண்டு இலவச பயிற்சிக்கான தேர்வையும் நடத்த உள்ளன.
18 முதல் 40 வயதுக்குட்பட்ட 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ITI, பட்டதாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் Bio-data, கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் பங்கேற்கலாம்.
காஞ்சிபுரம் மாவட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பிப்ரவரி 13 காலை 9.30 மணி முதல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
1,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது. பட்டதாரிகள், டிப்ளமோ, ITI மற்றும் 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதில் பங்கேற்கலாம்.
18 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் நேரில் வரலாம்.
யாருக்கு இது முக்கியம்?
படிப்பு முடித்தும் வேலை தேடி வரும் இளைஞர்களுக்கு ஒரே இடத்தில் பல நிறுவனங்களை சந்திக்கும் நல்ல வாய்ப்பு இது. குறிப்பாக தனியார் துறையில் உடனடி வேலை பெற விரும்புவோருக்கு இந்த முகாம்கள் உதவியாக இருக்கும்.
அடுத்த படி
பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் தங்களது சுயவிவரம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் குறிப்பிட்ட நேரத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும். தகுதி மற்றும் திறனை அடிப்படையாகக் கொண்டு உடனடி தேர்வு வாய்ப்பு கிடைக்கலாம்.
.png)