தமிழகத்தில் நிலமற்ற மற்றும் ஆதரவற்ற நிலையில் வாழும் முதிய விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் அரசு செயல்படுத்தி வரும் முக்கிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் ஒன்றாக நிலமற்ற விவசாயத் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் உள்ளது. வயது முதிர்ந்த நிலையில் வேறு வருமான ஆதாரம் இல்லாமல் வாழும் தொழிலாளர்களுக்கு இந்தத் திட்டம் நிதி மற்றும் அத்தியாவசிய ஆதரவாக அமைகிறது.
காலம் கடந்த உழைப்பின் பின்னர் வருமானம் இன்றி சிரமப்படுகின்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த தொகை நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதன் மூலம் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது.
மாதாந்திர ஓய்வூதியத்துடன் கூடுதல் நலன்களும் வழங்கப்படுகின்றன. பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற முக்கிய திருநாள்களில் ஆண்களுக்கு வேட்டி மற்றும் பெண்களுக்கு சேலை வழங்கப்படுகிறது. மேலும், உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய இலவச அரிசியும் வழங்கப்படுகிறது. சத்துணவு மையத்தில் உணவருந்துபவர்களுக்கு மாதம் 2 கிலோ, மற்ற பயனாளிகளுக்கு 4 கிலோ அரிசி வழங்கப்படும்.
யார் தகுதி பெறுவர்?
இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர் 60 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும். அவர் நிலமற்ற விவசாயத் தொழிலாளராகவும், ஆதரவற்ற நிலையில் இருப்பவராகவும் இருக்க வேண்டும். அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.50,000 ஐ மீறக்கூடாது. வேறு எந்த நிலையான வருமான ஆதாரமும் இருக்கக்கூடாது. 20 வயதுக்கு மேற்பட்ட மகன் அல்லது பேரன் ஆதரவு இல்லாதவராக இருக்க வேண்டும் என்பதும் முக்கிய நிபந்தனையாகும்.
விண்ணப்பிக்கும் முறை
இந்தத் திட்டத்திற்கு ஆன்லைன் விண்ணப்ப முறை இல்லை. விண்ணப்பம் ஆஃப்லைன் முறையில் மட்டுமே செய்ய வேண்டும். வெள்ளைத் தாளில் விண்ணப்பம் எழுதி அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கப்படும் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தைப் பயன்படுத்தி சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் தங்களது கிராம நிர்வாக அலுவலர் (VAO) அல்லது சிறப்பு வட்டாட்சியரை நேரில் சந்தித்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பித்த பின் தனித்துவ அடையாள எண் கொண்ட ஒப்புதல் சீட்டு வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள்
-
ஆதார் அட்டை நகல்
-
வயதுச் சான்று (வாக்காளர் அட்டை அல்லது பிற அதிகாரப்பூர்வ ஆவணம்)
-
வங்கி பாஸ்புத்தகத்தின் முதல் பக்க நகல்
விண்ணப்ப நிலை அறிதல்
விண்ணப்பம் பெற்றுக்கொள்ளப்பட்ட பிறகு வருவாய் ஆய்வாளர் நேரடியாக விண்ணப்பதாரரின் இருப்பிடத்திற்கு வந்து நிலை ஆய்வு மேற்கொள்வார். அதன் பின்னர் அங்கீகாரம் வழங்கப்படும். விண்ணப்ப நிலையை வட்டாட்சியர் அலுவலகத்தின் சமூகப் பாதுகாப்புத் திட்டப் பிரிவில் தொடர்பு கொண்டு அறியலாம். தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளின் பட்டியல் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் பராமரிக்கப்படும்.
நிலமற்ற மற்றும் ஆதரவற்ற முதிய விவசாயத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கும் இந்த ஓய்வூதியத் திட்டம், அவர்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாக உள்ளது. தகுதியுள்ளவர்கள் அருகிலுள்ள VAO அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.
